சொல்லின் சொல்….
நம் உரையாடலில்
ஒரு கண உமிழலில்
பிறப்பெடுக்கப் போகும்
எனது அடுத்த சொல்
விசேடமானது….
நான் உதிர்க்கும் இறுதி
சொல்லாக அது இருக்கலாம்…
அல்லது நீங்கள் கேட்கும்
கடைசிச் சொல்லாக கூட
இது அமையலாம்….
ஏற்கனவே நான்
காற்றில் விதைத்துப் போன
சொற்களின் தொடர்வாய்
இது நிகழலாம்…
ஒரு கண உமிழலில்
காலங் காலமாய் கட்டி
வைக்கப் பட்டிருந்த
கோட்டைக் கொத்தளங்களை
சரிக்கும் உளியாக கூட இது
இருக்க்கலாம்..
ஆதிக்கத்திற்கு எதிரான தோட்டாவாக
அது வெடிக்கலாம்…
அல்லது
மெளனமாய் இறந்தவனின்
கல்லறையில் ஒரு
உதிரிப் பூவாகக் கூட
அது கிடக்கலாம்….
ஆனால் அந்த சொல்லின்
கரைசலின் மீதத்தில்
நான் இருப்பேன் என்பதை
இப்போதைக்கு
உறுதியாய் சொல்ல முடியும்.

மறுமொழி இடுக