பிரிவிற்கான மொழி…
மிக நெருங்கிய தருணத்தில்
ஒரு வியர்வைத்துளியின்
இடைவெளியில் மெல்ல
விலகி விட்டோம் நாம்….
எதிரெதிர் திசைகளில்
நகரும் ரயில் பெட்டிகளில்
எது நகருகிறது….?
நிகழ்தகவுகளாய் வர்ணம்
மாறிய மனதின் மெளனத்தை
பேச முடியுமா உன்னால்…?
இயல்பு மீறிய ஒரு
சலனத்திற்காக
இருவருமே அமைதியாய்
காத்திருக்கிறோம்….
பிரிவுகளின் உலர்ந்த
காரணங்களுக்கான
பிரத்யோக மொழிகளை
சொல்வதற்கு உதடுகள்
தங்களை ஈரப் படுத்திக்
கொள்கின்றன…
ஏதாவது ஒரு உடைபடாத
நொடியில் உடையலாம்
நம் பிரிவிற்கான
உறவு….
நீண்ட மெளனங்களின்
கருத்த வராண்டாக்களில்
தளர்ந்து நடக்கிறது….
நம்மை மீறி கொப்புளிக்க
துடித்த நம் முதல்
துளிர்த்தலுக்கான நினைவு….
மிடறு விழுங்கினாலும்
மீறி வர எத்தனிக்கும்
நம் அரிதாரத்தை காட்டும்
அளவுக்கு மீறிய ஓப்பனை…
நொடிகள் கடந்தாலும்
நம்மை கடக்காமல்
நிற்கிறது இந்த
இமைக்காத பொழுது….
சில பெருமூச்செறிதல்களுக்கு
பிறகு…
சின்னப் புன்னகையோடும்
மென்மை கைக் குலுக்கலோடும்
துவங்கிறது…
நம் பிரிவிற்கான மொழி.

மறுமொழி இடுக