என் கவிதைகள்…

*

இன்னும் ஈரம் குலையாத
வண்ணத் தூரிகையில்
இருந்து
சொட்டிக்கொண்டே இருக்கின்றன…
வரையப் படாத என் ஓவியங்கள்…

*

அறியப் படாத பின்னிரவுகஆளில்
வெளிர் நீலமாய் கசியும்
என் கனவுகளை மிரட்டி
துரத்துகின்றன தெரு
நாய்களின் ஓலங்கள்…

*

விடியலின் பிளிறலில்
மிரண்டு ஓடும்
விட்டில்கள்…..

*

நீ விசி எறிந்த
எனக்கான
ப்ரத்யோக பார்வையை
உலர்ந்த சருகுகளிடயே
சப்தமிடாமல் நான் தேடிய
அந்த மஞ்சள் மாலைப்
பொழுதில்……..
என்னைக் கடந்து எத்தனை
பட்டாம்பூச்சிகள் பறந்து
சென்றன என்பதற்கான
கணக்கில் நினைவில்
நின்றவை தவிர
மறந்துப் போன
சில உதிரிகளைக் குறித்து
எனது பெரும் கவலை
இருந்தது என்பது பற்றி
நீ ஏதும் அறிவாயா..?

*

ஆங்காங்கே இடப்பட்ட
புள்ளிகளில் யூகிக்க
முடியாமல் திணறுகிறேன்
ஒரு அழகிய கோலாத்தை….

*

~ by manisenthil76 மேல் மார்ச் 25, 2008.

மறுமொழி இடுக